போலியோ சொட்டு மருந்து

எதிர்வரும் ஜனவரி 19ம் தேதி

பிப்ரவரி 23ம் தேதிகளில்

போலியோ சொட்டு மருந்து

இலவசமாக வழங்கபடுகிறது

5 வயதிற்குடப்பட்ட உங்கள்

குழந்தைகளுக்கு மறக்காமல்

போலியோ சொட்டு மருந்து கொடுங்க.

போலியோ வராமல் தடுங்க

உங்கள் நலனில்


கூடலூர் நுகர்வோர் மனித வள
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி மாவட்டம்
94 88 520 800 - 94 898 60 250 - 944 29 740 75 - 948 639 34 06

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சர்வதேச ஓசோன் தினம் sep 16

உலகமே 'ஓசோன்' ஓட்டையால் வெப்பம் அதிகரிப்பதை எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இயற்கை வளம் நிறைய பெற்ற நாம் அதை உணர்ந்துள்ளோமா என்பது சந்தேகமே. அடர்ந்த மரங்களால், பரந்த வனங்களை வெட்டி வீழ்த்தியதே, தட்ப வெப்ப நிலை தடுமாற்றத்திற்கு காரணம் என யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. உணர்ந்திருந்தால் விண்ணுயர்ந்த மரங்களையும், விலைமதிப்பில்லாத உயிரினங்களையும் கொல்வதையே தொழிலாக கொண்டிருப்போமா? தமிழகத்தின் மழை பொழிவுக்கும், வளம் செழிக்கவும் காரணமான மேற்கு தொடர்ச்சி மலையில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன.

வாழ்க்கை பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் இந்த வனவளம் பற்றி, 'வைல்ட் டிரஸ்ட் ஆப் இந்தியா' அமைப்பின் ஆலோசகர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது: மேற்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1600 கி.மீ., பரப்பளவு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 8 சதுர கி.மீ., இத்தொடரில்தான் கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என பல நதிகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள உயர்ந்த சிகரங்கள் ஆனைமுடி (2695 அடி), தொட்டபெட்டா (2637). பலதரப்பட்ட தாவரங்கள், முட்புதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என உயிரினங்கள் இங்கு உள்ளன. இலையுதிர்காடுகள், ஊசியிலை காடுகள், அடர்காடுகள், சோலை காடுகள், பசுமைமாறா காடுகள் என உயிரினங்களின் வாழ்விடங்களும் உள்ளன. இம்மலைத் தொடரில் ஆண்டுக்கு நான்கைந்து மாதங்களில் 1000 முதல் 9 000 மி.மீ., அளவு மழை பொழிகிறது. 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இங்கு 4000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன. இதில் 56 வகை தாவரங்கள் வேறெங்கும் இல்லாத வகையில், இம்மலைத் தொடரில் மட்டுமே காணப்படுகின்றன. 1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதம் இங்கு மட்டுமே உள்ளவை. 63 சதவீத மரவகைகள் இங்குள்ளன.
விலங்குகளை பொறுத்தவரை, பாலூட்டி வகைகள் 120; நீர்நில வாழ்வன 121; 600 வகை பறவைகள்; ஊர்வனவற்றில் 157 வகை; மீன் இனங்களில் 218 வகை இங்கு வாழ்கின்றன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய 'கூரை மன்னி', மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன. இந்தியாவில் உள்ள ஒரே ஒரு வகை யானை, இங்கும் உள்ளது. காட்டுப் பன்றி, கீரி, நீர்நாய், மரநாய் போன்ற இனங்களைச் சேர்ந்த 31 வகைகளில் 12 இங்கு உள்ளன. 15 வகை பூனை இனங்களில் ஐந்து வகை இம்மலைத் தொடரில் உள்ளது. உலகளவில் உள்ள 4 வகை கழுதைப் புலி வகையில் ஒரு வகை இங்குள்ளது. ஆறுவகை நரி, நாய், ஓநாய் போன்றவற்றில் ஐந்து வகை இங்குள்ளன. நான்கு வகை கரடிகளில் ஒன்று, இரண்டு வகை முயல்களில் ஒன்று இங்குள்ளது. இந்தியாவில் உள்ள 15 குரங்கு வகைகளில் ஐந்து இங்கு உள்ளன. 218 மீன்வகைகளில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன.
மலைவளம் காப்போம்: இந்த மலைவளம் காக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம். நல்ல அழகிய சுற்றுப்புறச் சூழலுக்கு இது அத்தியாவசியம். தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமா? அதற்கும் மலைவளமே காரணம். மலைவளம் நன்றாக இருந்தால்தான் அனைத்து உயிரினங்களும் சமநிலையில் இருக்கும். புல், பூண்டு முதல் விலங்குகள் வரை உயிரின பரவல் முறையாக இருந்தால்தான், உயிரின இயக்கமும் முறையாக இருக்கும். மரங்கள் வளரும். மழை கிடைக்கும். இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையில் மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் நிறைந்துள்ளன. மிளகு, அரிசி, காட்டு மஞ்சள், முருங்கை போன்ற மலைத் தொடர்பான இயற்கை தாவரங்கள் உள்ளன. இதுபோன்ற தாவர வகைகளின் 'ஜீன்' பிரித்து தரமான தாவரங்களை உருவாக்கி, மனிதனுக்கு தேவைப்படும் வகையில் அவற்றை பயன்படுத்தலாம்.
காடுகளுக்கான பிரச்னைகள்: இதுபோன்ற மலைவளம் நிறைந்த பகுதி யில் மனிதர்கள் வேட்டையாடுகின்றனர். விதிமுறைகளை புறந்தள்ளி விலங்கு, பறவை, தாவரங்களை அழிக்கின்றனர். காட்டுத் தீயை உருவாக்கி வனப்பகுதியையே வறட்சிப் பகுதியாக்கி விடுகின்றனர். எழிலார்ந்த பகுதிகளில் சுற்றுலா தலங்களையும், கல்வி நிறுவனங்களையும் ஏற்படுத்தி காட்டு வளத்தையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகின்றனர். பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைகின்றன. மண்வள மேம்பாடு, உயிரின பரவல் தடுக்கப்படுகிறது. புதிய, புதிய வழித்தடங்களை அமைப்பதால் வன உயிரினங்கள் நடமாட்டம் தடுக்கப்படுகிறது. இயற்கையான சூழலில் இணைந்து வாழவேண்டிய விலங்குகள், வனத் தீவுக்குள் தனியாக காலந்தள்ளுகின்றன. இதனால் விலங்குகள் வாரிசுகளை உருவாக்குவதில் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் சுற்றுச் சூழ்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும். நாளடைவில் தட்பவெப்ப நிலையும் பாதித்து, எதிர்கால சந்ததிகளுக்கு இன்னல் பல விளைவிக்கும். இதை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
என்ன செய்யலாம்? காடுகள், அவற்றின் வளம், பயன் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், சுற்றுச் சூழல் மேம்பாட்டு குழுக்களை ஏற்படுத்த வேண்டும். காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மூலம் இதை சாத்தியமாக்கலாம். விலங்குகள் உண்ணாத தாவரங்களை பயிரிடலாம். விடுதிகளில், வீடுகளில் விறகு பயன்பாட்டை குறைத்து, 'பயோகாஸை' அதிகரிக்க வேண்டும். அதற்கு மானியம் தருவதை அதிகரிக்க வேண்டும். காட்டை நம்பியுள்ள மக்களுக்கு வேறு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் உள்ள மாநில அரசுகள் ஒன்றிணைந்து வன விலங்குகளை காக்கவும், மரங்கள் வெட்டுவதை தடுக்கவும் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக